Friday : March 14, 2025
6 : 20 : 11 PM
Breaking News

இளையராஜா சிம்பொனி அமைக்க லிடியன் நாதஸ்வரம் உதவினாரா?.. இசைஞானியின் பதில் என்ன ???

`த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்..!' - மன்சூர் அலிகானை எச்சரித்த நீதிமன்றம்

top-news
https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக் கருத்துகள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கமும் மன்னிப்புக் கேட்கும்படி, மன்சூர் அலிகானை வலியுறுத்தியது. இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கோர, நடிகை த்ரிஷாவும் மன்னிப்பை  ஏற்றுக்கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்தச் சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ``இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாதானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்?" எனக் கூறிய நீதிபதி, ``எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா?" எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.


மேலும், ``திரைத்துறையில் இருக்கும் ஒருவரைப் பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு, அவரின் வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார். மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக இது போன்ற சர்ச்சையான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறிய நீதிபதி, ``எதற்காக அவர் ஊடகங்களைச் சந்திக்கிறார்... அவருக்கு வேறு பணி இல்லையா... தான் எந்தத் தவறும் செய்யவில்லை என தற்போது மன்சூர் அலிகான் கூறுகிறார். கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகவா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞர், ``மன்சூர் அலிகான் பேசியது தொடர்பாக முழு வீடியோவையும் தாக்கல் செய்கிறோம். மன்சூர் அலிகானைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார். 

நடிகை த்ரிஷா தரப்பில் வழக்கறிஞர் கே.வி.பாபு ஆஜராகி, ``மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்ட நிலையில், இந்த விவகாரம் முடிந்துவிட்டது. இதில் பாதிக்கப்பட்ட த்ரிஷாவே அமைதியாக இருக்கும் நிலையில், தற்போது எதற்காக மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்திருக்கிறார் எனத் தெரியவில்லை?" எனக் கூறினார். இதையடுத்து, மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.


https://parasuramtamilnews.in/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *